தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச தடையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச தடையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 May 2022 12:00 AM IST (Updated: 3 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை:-

தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

பட்டின பிரவேசம்

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். அப்போது தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி சென்று வீதியுலா செல்வார்கள். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் மனிதனை மனிதன் சுமப்பதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தன. 

தடை 

இதனை ஏற்றுக்கொண்ட மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள பட்டின பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். 

ஆர்ப்பாட்டம்

இதனை கண்டித்தும், தடையை ரத்து செய்யக்கோரியும் தருமபுரம் ஆதீன மடத்தின் நுழைவுவாயில் முன்பு நேற்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூங்கில்தோட்டம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 
தொன்று தொட்டு நடந்து வரும் பட்டின பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வை தடை செய்ததை கண்டித்தும், தடையை உடனடியாக விலக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story