திருவாரூர் மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
திருவாரூர் மாவட்டத்தில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
ரம்ஜான் பண்டிகை
திருவாரூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவாரூர் அடியக்கமங்கலத்தில் உள்ள இறகு பந்து மைதானத்தில் த.மு.மு.க. சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் மாவட்ட தலைவர் நவாஸ் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். இதில் அனைவரும் துன்பங்களில் இருந்து விடுபட்டு எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர். கொடிக்கால்பாளையம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், புலிவலம், விஜயபுரம் உள்ளிட்ட இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடினர். இதைமுன்னிட்டு புனித நீராடி, புத்தாடை அணிந்து பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
நீடாமங்கலம் கீழத்தெரு பள்ளிவாசல், பழையநீடாமங்கலம் பள்ளிவாசல், கோயில்வெண்ணி பள்ளிவாசல், நாகை சாலை பள்ளிவாசல், ஆலங்குடி பள்ளிவாசல், பூவனூர் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
கூத்தாநல்லூர் பகுதியில் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பூதமங்கலம், பொதக்குடி, காரியமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில், இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை பல்வேறு இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
ஜாம்புவானோடை தர்கா பள்ளிவாசலில் நடந்த ரம்ஜான் தொழுகையில் தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹீப் உள்பட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டையில் பெரிய பள்ளிவாசல்களான குட்டியார் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் குத்பா பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தெற்குத் தெரு அரபு சாஹிப் பள்ளிவாசல், புதுத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல், எஸ்.பி.கே.எம். தோட்டத்தில் உள்ள மெக்கா பள்ளி வாசல், ஆசாத்நகர் ஜும்ஆ பள்ளிவாசல், நாச்சிக்குளம் ஜும்ஆ பள்ளிவாசல், எடையூர் சங்கேந்தி ஜும்ஆ பள்ளிவாசலிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story