சமத்துவத்துக்காக போராடியவர் பசவண்ணர்-அமித்ஷா புகழாரம்


சமத்துவத்துக்காக போராடியவர் பசவண்ணர்-அமித்ஷா புகழாரம்
x
தினத்தந்தி 3 May 2022 10:16 PM IST (Updated: 3 May 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

சமத்துவத்துக்காக போராடியவர் பசவண்ணர் என்று உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டினார்.


பெங்களூரு:

ஜனநாயக குணங்கள்

  பசவண்ணர் ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூரு சாளுக்கிய சர்க்கிளில் உள்ள அவரது சிலைக்கு உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். இதில் அமித்ஷாவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பசவண்ணர் சிலையை வழங்கி கவுரவித்தார்.

  பசவண்ணர் குறித்து அமித்ஷா பேசும்போது, ‘இன்று (நேற்று) பசவ ஜெயந்தி. அட்சய திருதியை விழாக்களை நாம் கொண்டாடுகிறோம். 10-வது நூற்றாண்டில் பசவண்ணர் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டார். அவரது கொள்கை, ஜனநாயக குணங்களை நாம் இன்று பயன்படுத்த வேண்டும். அவர் அனுபவ மண்டபத்தை நிறுவி அதில் அனைத்து சமூகங்களுக்கும் இடம் அளித்தார். சமத்துவத்திற்காக அவர் போராடினார்’ என்றார்.

சமூக சீர்திருத்தம்

  கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) தேர்தல் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பசவண்ணரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்று அவருக்கு அமித்ஷா மரியாதை செலுத்தியுள்ளார். அந்த சமூகம் கர்நாடகத்தில் பலமான சமூகம் ஆகும். அந்த சமூகம் பா.ஜனதாவின் வலுவான வாக்கு வங்கியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  பசவண்ணர் சார்ந்த லிங்காயத் சமூகத்தினர் கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் உள்ளனர். அதனால் பசவ ஜெயந்தி தினத்தன்று கர்நாடகத்தில் அரசு விடுமுறை விடப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அமித்ஷா வருகையையொட்டி சாளுக்கிய சர்க்கிளில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


Next Story