கிருஷ்ணகிரி பகுதியில் தொடர் மழை: சூறைக்காற்றுக்கு மாங்காய்கள் உதிர்ந்து சேதம்
கிருஷ்ணகிரி பகுதியில் பெய்யும் தொடர் மழையால் சூறைக்காற்றுக்கு மாங்காய்கள் உதிர்ந்து சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியில் பெய்யும் தொடர் மழையால் சூறைக்காற்றுக்கு மாங்காய்கள் உதிர்ந்து சேதமடைந்தன.
சூறைக்காற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கூடிய மழையால், அறுவடைக்கு தயாரான மாங்காய்கள் உதிர்ந்தன. குறிப்பாக, கிருஷ்ணகிரி அருகே சோக்காடி, மோரனஅள்ளி, கொடுகூர், பகுதிகளில் சுமார் 20 டன் மாங்காய்கள் உதிர்ந்தன.
தோட்டத்தில் உதிர்ந்த மாங்காய்கள் கூலி ஆட்கள் மூலம் சேகரித்து மண்டிகளுக்கு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். உதிர்ந்த மாங்காய்கள் கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், போக்குவரத்து கூலி கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக கொடுகூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
மா விளைச்சல் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆலங்கட்டி, சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு டன் கணக்கில் மாங்காய்கள் உதிர்ந்தன. நாங்கள் அறுவடை செய்து மண்டிகளுக்கு கொண்டு செல்லப்படும் பெங்களூரா ரக மாங்காய்கள் டன் ரூ.14 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்கின்றனர்.
மழைக்கு உதிர்ந்த மாங்காய்கள் டன் ரூ.5 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் பராமரிப்பு, மருந்து, கூலி மற்றும் போக்குவரத்து செலவுகள் கூட கிடைப்பதில்லை. எனவே, தமிழக அரசு கிருஷ்ணகிரியில் மாங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மத்தூர்
மத்தூர், போச்சம்பள்ளி, அகரம், குடிமேனஅள்ளி பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் பனை மரங்கள் சாய்ந்தன. குடிமேனஅள்ளி செல்லும் சாலையில் புளியமரம் காற்றுக்கு சாலையில் விழுந்தது. மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால் இரவு நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுண்டகாப்பட்டியில் சூறைக்காற்றுக்கு 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.
Related Tags :
Next Story