சூறைக்காற்றுடன் பலத்த மழை: 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன
காரிமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
காரிமங்கலம்:
சூறைக்காற்றுடன் பலத்த மழை
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. காரிமங்கலம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் கழிவுநீருடன் கலந்து மழை நீர் தேங்கி நின்றது.
சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் இருந்த வயர்லெஸ் டவர் சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக போலீசாருக்கு காயம் ஏற்படவில்லை.
மின்கம்பங்கள் சாய்ந்தன
பெரியாம்பட்டி, கெரகோடஅள்ளி, நாகணம்பட்டி, சின்னமிட்டஅள்ளி பொம்மஅள்ளி உள்ளிட்ட காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். காரிமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பலத்த மழைக்கு சாலையோரம் இருந்த மரங்கள் மற்றும் வாழைகள் சரிந்தன. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த மாம்பழங்களும் கீழே விழுந்தன. தர்மபுரி அருகே நடுப்பட்டியில் மொரப்பூர் சாலையில் இருந்த புளிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story