காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 May 2022 10:30 PM IST (Updated: 3 May 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்:
தொடர்மழை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 
இதனால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த நீர்வரத்து நேற்று அதிகரித்தது. 
7 ஆயிரம் கனஅடி
அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் போன்றவற்றில் பரவலாக தண்ணீர் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே நேற்று ரமலான் பண்டிகை விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

Next Story