தனித்தனி தீ விபத்து: 7 வீடுகள் எரிந்து சாம்பல்; ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்
உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் அருகே நடந்த தனித்தனி தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பலானது. ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
உளுந்தூர்பேட்டை,
கூலி தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நயினார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளியான இவரது குடிசை வீடு நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீயானது அருகில் இருந்த சின்னபொண்ணு, அய்யனார் ஆகியோரது கூரை வீடுகளுக்கும், கனகவல்லி சுரேஷ், சத்தியவாணி ஆகியோரது குடிசை வீடுகளுக்கும் பரவி மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் அந்த இடம் புகை மண்டலமாக காட்சியளித்தது.
சிலிண்டர் வெடித்து சிதறியது
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்ததோடு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீவிபத்து பற்றி உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையில் உளுந்தூர்பேட்டை, மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அய்யனார் என்பவர் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் கண்இமைக்கும் நேரத்தில் வெளியே ஓடிவந்ததால், உயிர்தப்பினார். இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் 5 வீடுகளில் இருந்த நகைகள், பணம் மற்றும் மின்சாதன பொருட்கள், முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
மற்றொரு தீவிபத்து
ரிஷிவந்தியம் அடுத்த எடுத்தனூர் கிராமத்தை சேர்ந்த சுப்புராயன் மகன்கள் வேல்முருகன் (வயது 40), மணிகண்டன் (38). இவர்களது கூரை வீடுகள் மின் கசிவு காரணமாக நேற்று மதியம் தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள் 2 வீடுகளில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது.
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு எடுத்தனூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரிசி, மளிகை பொருட்கள், வேட்டி, சேலை மற்றும் தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story