ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 3 May 2022 10:56 PM IST (Updated: 3 May 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஏழைகளுக்கு உதவி செய்து கோலாகலமாக கொண்டாடினர்.

பெரம்பலூர்
ரம்ஜான் கொண்டாட்டம் 
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரம்ஜான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் முஸ்லிம்கள் நோன்பினை கடைபிடிப்பார்கள். ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30 நாட்களும்  நோன்பினை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்கிவருவார்கள். ரம்ஜான் 30 நாள் நோன்பு முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரம்ஜான் பண்டிகையாக கொண்டாடுவர். 
இதற்காக அதிகாலையில் தொழுகை முடித்த பின்னர் புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துகொள்வர். பெருநாள் சிறப்பு தொழுகையை திறந்தவெளி திடல்களில் தொழுவது கூடுதல் சிறப்பு என்பதால் பல்வேறு பகுதிகளில் திடல்களிலும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறும். தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக ஏதாவது ஒரு ஏழைக்கு உதவி செய்யவேண்டும் அடிப்படையில் பத்து என்னும் உதவியை வழங்கிவிட்டு தொழுகையில் ஈடுபடுவர்.
ஊர்வலம் 
அதன் அடிப்படையில் பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் டவுன் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மதரசாசாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு நகரில் உள்ள அனைத்து முஸ்லிம்பெருமக்களும் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் டவுன் பள்ளிவாசல் பேஸ் இமாம் சல்மான்ஹஜ்ரத், ரம்ஜான்நோன்பின் மாண்புகள், இஸ்லாம் ஒருங்கிணைப்பிற்கும், வளர்ச்சிக்கும் பெருமகனார் நபி (ஸல்) ஆற்றிய பணிகள், ஈகையின் அவசியம் அன்புசகோதரத்துவத்தை நிலை நாட்டவேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
 இதில் டவுன் காஜி அப்துல்சலாம்தாவூதி, பள்ளிவாசல் முத்தவல்லி அல்லாபிச்சை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட உலமாசபை தலைவர் முகம்மது முனீர், பெரம்பலூர் மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் ஒருங்கிணைந்த ஜமாஅத் தலைவர் எஸ்.எஸ்.சுல்தான் இப்ராகீம், மதரசா நிர்வாகிகள் மற்றும் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் சிறுவர்-சிறுமிகளும் திரளாக கலந்துகொண்டு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
சிறப்பு தொழுகை 
 இதேபோல் வடக்குமாதவி சாலையில் ஆசியா நகர் அருகே அமைக்கப்பட்டிருந்த திடலில் முஸ்லிம் பெண்கள் தனியே தொழுகை நடத்தினர். இதனைத்தொடர்ந்து முஸ்லிம்கள் டவுன்பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு தொழுகை நடத்தியபின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் பெரம்பலூரில் மெக்கா பள்ளிவாசல், நூர்பள்ளி, மெதினா, ஆலம்பாடிசாலை கலிபா பள்ளிவாசல்கள், துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளிவாசல் ஆகியவற்றில் ஈத்பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லெப்பைக்குடிகாடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம் மசூதிகள், அரும்பாவூர், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விஸ்வக்குடி, முகம்மதுபட்டிணம், வி.களத்தூர், வாலிகண்டபுரம், தேவையூர், பாடாலூர், து.களத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

Next Story