நிதி நிறுவன பங்குதாரர் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்களால் பரபரப்பு
நிதி நிறுவன பங்குதாரர் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழப்பழுவூர்
கடந்த 2006-ம் ஆண்டு முதல் மதுரையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஒரு தனியார் நிதி நிறுவனம் நடத்தப்பட்டு வந்தது. இதில் சுமார் 13 லட்சம் வாடிக்கையாளர்களும், 4 லட்சம் முகவர்களும் பணத்தை முதலீடு செய்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மத்திய அரசு அந்த நிறுவனத்தை தடை செய்தது. இதனால் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி நிறுவனத்தின் சொத்தை விற்று ரூ.1,300 கோடி கொடுக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி நிறுவனத்தின் பங்கு தாரர்களில் ஒருவரான அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழூரை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூரில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடும் முயற்சியில் நேற்று ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் இது குறித்து முறையாக புகார் செய்தால் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக எழுதி புகார் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story