அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்
ஒடுகத்தூரில் அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை
அணைக்கட்டு
ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி தேர்வு நடந்து வருகிறது.
நேற்று தேர்வு முடிந்து மாலையில் மாணவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கும் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சமூகப்பிரிவாக மாறி இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் ஒடுகத்தூர் பகுதிகளில் வாழும் ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக ஆய்வுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி மாணவர்கள் நிற்பதை பார்த்து ஆசிரியர்களிடம் இதுகுறித்து கேட்டறிந்தார்.
அதற்குள் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது மாணவர்கள் இதுபோன்ற சம்பவங்களால் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள் என்றனர்.
இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி பெற்றோர்கள் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி இன்று அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து பள்ளி வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரைகளை வழங்கினர்.
மேலும் இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத முடியும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு சம்மதம் தெரிவித்து இருதரப்பையும் சேர்ந்த பெற்றோர்கள் எழுத்துபூர்வமாக தன் பிள்ளைகள் இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்று எழுதிக் கொடுத்தனர்.
அப்போது மண்டல துணை தாசில்தார் குமரேசன், வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, தலைமைஆசிரியர் பிச்சை மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story