துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது; ஜி.கே.வாசன் பேட்டி
துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்று வேலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
வேலூர்
துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்று வேலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
ஜி.கே.வாசன் வேலூர் வருகை
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வேலூருக்கு இன்று வருகை தந்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு 100 சதவீதம் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. மத்திய, மாநில அரசின் தொற்று கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் தங்கள் மற்றும் குடும்பம், உறவினர்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
சமீபகாலங்களில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் நடந்து கொள்ளும் விதம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் ஒழுக்கத்துடன் வளர வேண்டும். கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும்.
மாணவர்களுக்கு நல்ல சிந்தனைகள் வளர நல்லொழுக்க கல்வியை கொண்டுவர வேண்டும். மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மாதம் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.
மக்கள் ஏமாற்றம்
பெண்களிடம் செயின்பறிப்பு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. இதனை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.
மதங்கள் மீது விமர்சனம் கூடாது. எந்தமதம் ஆனாலும் அந்த மதத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனிப்பட்ட கருத்தை மதங்கள் மீது வெளிப்படுத்தினால் அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள். ஒருவரை மதத்தை வைத்து புண்படுத்தக்கூடாது.
வாக்களித்த மக்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறது. ஓராண்டு கால ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் என்று மக்கள் நினைத்தார்கள்.
ஆனால் அதனை நிறைவேற்ற தவறி விட்டது. மாறாக சொத்துவரி என்ற பெயரில் மேலும் சுமையை பொதுமக்கள் மேல் சுமத்தி இருப்பது ஏற்புடையது அல்ல.
அரசியல் தலையீடு கூடாது
துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் இருக்க கூடாது. அப்போது தான் கல்வி வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும். துணைவேந்தர்களை கவர்னர் நியமனம் செய்வது தொடர வேண்டும். கவர்னருக்கு உரிய அதிகாரங்களை முறையே சரியாக பின்பற்ற வேண்டும்.
அதில் அரசியல் பூசல் இருக்க கூடாது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே த.மா.கா.வின் நிலைப்பாடு. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்ற நிலையை கூட அரசு உருவாக்கவில்லை என்ற ஆதங்கம் உள்ளது.
கெங்கையம்மன் சிரசு திருவிழா
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை வழக்கம்போல் அறங்காவலர்குழு தலைமையில் நடத்த அனுமதிக்க வேண்டும். குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் நடத்த கூடாது என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
நெமிலியில் 30 ஆயிரம் நெல்மூட்டைகள் வெட்டவெளியில் காய்ந்து கிடக்கிறது. அதனை பாதுகாக்க குடோன் வசதி ஏற்படுத்த வேண்டும்.
குடியாத்தத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்த பாலத்தை சரிபடுத்தி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆம்பூரில் மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வேலூர் மாநகர மாவட்ட தலைவர் மூர்த்தி, வர்த்தக அணி மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில செயலாளர் சிவானந்தன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story