வேலூர் கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ரமலான் பண்டிகையையொட்டி வேலூர் கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
வேலூர்
வேலூர் கோட்டையில் உள்ள மசூதியில் ரமலான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி மேற்பார்வையில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் கோட்டை நுழைவு வாயில் மற்றும் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோட்டையின் நுழைவு வாயில் முன்பு காந்தி சிலை அருகே இரும்பு கம்பிகளால் (பேரிகார்டு) போலீசார் தடுப்புகள் அமைத்தனர்.
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டைக்குள் ஆட்டோ, கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
வாகனங்களை காந்திசிலை அருகே நிறுத்தி விட்டு சுற்றுலா பயணிகள், ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வந்த பொதுமக்கள் கோட்டைக்குள் சென்றனர்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வந்த வாகனங்கள் மட்டும் சோதனைக்குப் பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. அனைவரையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
ரமலான் விடுமுறையையொட்டி கோட்டையை சுற்றிப்பார்க்கவும், பூங்காவில் அமர்ந்து பொழுதை போக்கவும் குடும்பத்துடன் பலர் வந்தனர்.
கோட்டைக்கு வந்த சில காதல் ஜோடிகள் போலீசாரை கண்டதும் திரும்பி சென்று விட்டனர்.
Related Tags :
Next Story