புதுக்கோட்டை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை:
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது ரம்ஜான் பண்டிகையாகும். முஸ்லிம்கள் நோன்பு இருந்து இந்த பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடு காரணமாக பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற அனுமதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி புத்தாடை அணிந்து, சிறப்பு தொழுகையில் பங்கேற்று கொண்டாடினர்.
பிரியாணி விற்பனை
புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நேற்று காலை நடைபெற்றது. இதில் பள்ளிவாசலில் கூட்டம் நிரம்பியதோடு, முதல் தளத்திலும், மைதானத்திலும் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இதில் சிறுவர், சிறுமிகளும் தொழுகையில் பங்கேற்று வாழ்த்துக்களை பரிமாறினர். இதேபோல மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்கள் என மொத்தம் 134 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பண்டிகையையொட்டி நண்பர்கள், உறவினர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தனர். அசைவ ஓட்டல்களிலும் பிரியாணி விற்பனையும் களைகட்டியது.
ஆலங்குடி
ஆலங்குடி அருகே கல்லாலங்குடி ஊராட்சி கலிபுல்லா நகர் ஜும்மா பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை செய்தனர். பொன்னமராவதி இந்திராநகர் மைதானத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொழுகை நடத்தினர்.
Related Tags :
Next Story