தேவகோட்டையில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற இலங்கை அகதி
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை இரும்பு கம்பியால் அடித்து இலங்கை அகதி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவகோட்டை,
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை இரும்பு கம்பியால் அடித்து இலங்கை அகதி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அகதிகள் முகாம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சாலையில் தாழையூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த முகாமை சேர்ந்தவர் நிமல்ராஜ் (வயது48). எலக்ட்ரீசியன். இவரது மனைவி துஷ்யேந்தினி (38). இவர்களுக்கு வினிதா என்ற மகளும், வினித் என்ற மகனும் உள்ளனர்.
மகள் வினிதாவுக்கு திருமணமாகி, ராம்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவருடன் வசித்துவருகிறார். வினித் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நிமல்ராஜ் அகதிகள் முகாமிலேயே பெட்டிக்கடையும் நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக மனைவி துஷ்யேந்தினியும் கடையை கவனித்து வந்தார்.
கொலை
கடைக்கு வருபவர்களிடம் துஷ்யேந்தினி சிரித்து பேசியபடி இருந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் நிமல்ராஜூவுக்கு சந்தேகம் ஏற்பட்டு, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
நேற்று காலையிலும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரிடம் கோபித்து கொண்டு தேவகோட்டை ராம்நகரில் உள்ள மகள் வீட்டிற்கு துஷ்யேந்தினி சென்றார். கணவர் நிமல்ராஜும் அங்கு சென்று மகள் வீட்டில் வைத்து மனைவியிடம் தகராறு செய்தார். அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த நிமல்ராஜ் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவி துஷ்யேந்தினி தலையில் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த துஷ்யேந்தினியை அவரது மகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதல் உதவிக்குப்பின் மேல் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே துஷ்யேந்தினி பரிதாபமாக இறந்தார்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன், நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நிமல்ராஜை கைது செய்தனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story