நெல்லை மேலப்பாளையத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை


நெல்லை மேலப்பாளையத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 4 May 2022 12:30 AM IST (Updated: 4 May 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மேலப்பாளையத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை:
முஸ்லிம்கள் ரமலான் மாதத்தையொட்டி கடந்த 30 நாட்களாக நோன்பு மேற்கொண்டு வந்தனர். நோன்பு நிறைவையொட்டி நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள். மேலப்பாளையம் ஜின்னா திடலில் காலை 7 மணிக்கு தொழுகை நடைபெற்றது. இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் துபை சாகுல் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் அருகில் உள்ள வாவர் பள்ளிவாசலில் நடந்த தொகையில் மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் -இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில் மேலப்பாளையம் பஜார் திடலில் காலை 7.30 மணிக்கு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமிய பிரசார பேரவை மாநில துணை செயலாளர் அப்துர் ரகுமான் தாவதி தொழுகையை நடத்தி பெருநாள் உரையாற்றினார். இதில் நெல்லை மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், துணை செயலாளர் காஜா, துணை தலைவர் தேயிலை மைதீன், துணை செயலாளர்கள் கம்புக்கடை ரசூல், பெஸ்ட் ரசூல், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பியாசுர் ரகுமான், தெற்கு பகுதி தலைவர் மாலிக் ஷேக், வடக்கு பகுதி தலைவர் குதா முகமது உள்பட ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலப்பாளையம் கரீம் நகர் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் வளாகத்தில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தொழுகை நடத்தி பெருநாள் உரையாற்றினார். பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா ஜாபர் அலி, மீரான் முகைதீன் அன்வாரி, ஜவஹர், ஜெய்னுல்ஆபிதீன், தாவுத் ஹாஜியார், முஸ்தபா ஆகியோர் உடன் இருந்தனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த தொழுகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார். மேலும் அவர் அனைவருக்கும் வாழ்த்து செய்தியை வெளியிட்டார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரகுமான் கிளை சார்பில் மாநகராட்சி ஈத்கா திடலில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. மாநில மேலாண்மை குழு தலைவர் சம்சுல்லுகா ரகுமானி பெருநாள் உரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். நெல்லை டவுன் பகுதிகளில் அமைந்துள்ள ஜாமியா பள்ளிவாசல், முகம்மது அலி தெரு பள்ளிவாசல், கான் மியான் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் பாளையங்கோட்டை, பேட்டை, தச்சநல்லூர் பகுதி பள்ளிவாசல்கள், மற்றும் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Next Story