நாகர்கோவில் அருகே தாயாரின் உடலைப்பெற அண்ணன்- தங்கை போட்டி
நாகர்கோவில் அருகே தாயாரின் உடலைப் பெற அண்ணனும், தங்கையும் போட்டி போடுகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருதரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே தாயாரின் உடலைப் பெற அண்ணனும், தங்கையும் போட்டி போடுகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருதரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாயார் சாவு
நாகர்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மேலக்காட்டு விளையைச் சேர்ந்தவர் குருசாமி நாடார். இவருடைய மனைவி பாஞ்சாலி (வயது 77). இவர்களுக்கு ராஜப்பா என்ற மகனும், உமாமகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு குருசாமி இறந்தார். அதன்பிறகு பாஞ்சாலி என்.ஜி.ஓ. காலனி அருகில் பிள்ளையார்புரத்தில் உள்ள உமாமகேஸ்வரி வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஞ்சாலி இறந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்ய ஏற்பாடுகள் நடந்ததாக தெரிகிறது.
அண்ணன்- தங்கை மனு
இதையறிந்த ராஜப்பா, தாயார் சாவில் சந்தேகம் இருப்பதாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் பாஞ்சாலி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உமாமகேஸ்வரி தன்னுடைய இல்லத்தில் நேற்று தாயாருக்கு இறுதிச்சடங்குகளை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து ராஜப்பா தரப்பினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதே சமயம் மகள் உமாமகேஸ்வரி தரப்பினரும் தனியாக நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுக்களில் மகன் தன்னிடம்தான் தாயார் உடலை ஒப்படைக்க வேண்டும் எனவும், மகள் தன்னிடம்தான் தாயார் உடலை ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
கோட்டாட்சியர் விசாரணை
இருதரப்பினரும் திரண்டு வந்து மனு கொடுத்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு மனுக்கள் வாங்கிய கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமிக்கு தகவல் கொடுத்து நாகர்கோவில் கோட்டாட்சியர் முன்னிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார். அதன்படி இன்று (புதன்கிழமை) நாகர்கோவில் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் தாயாரின் உடலை யாரிடம் ஒப்படைப்பது? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story