ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இடியுடன் கன மழை பெய்ததால் ராட்சத மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நொய்யல்,
கரூர் மாவட்டம் நொய்யல், புன்னம்சத்திரம், புகழூர், வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், பாலத்துறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் பெய்த கன மழையால் காகித ஆலை பேரூராட்சி அலுவலகம் அருகே டி.என்.பி.எல். காகித ஆலை செல்லும் சாலையில் இருந்த ராட்சத புளியமரம் ஒன்று நடுரோட்டில் சாய்ந்து விழுந்தது. அப்போது அதன் கிளைகள் மின் கம்பி மீது விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை நிறுத்தினர்.
ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் காகித ஆலை, சிமெண்டு ஆலை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும், காகித ஆலை, புகழூர், வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 8 மணி முதல் மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். மேலும் மின்வாரிய அதிகாரிகள் அறுந்து கிடந்த கம்பிகளை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் 6 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்தும், மின் வினியோகமும் சீரானது. இந்த சம்பவம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story