நெல்லை அருகே பட்டப்பகலில் பெண் எரித்துக் கொலை


நெல்லை அருகே பட்டப்பகலில் பெண் எரித்துக் கொலை
x
தினத்தந்தி 4 May 2022 12:48 AM IST (Updated: 4 May 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பட்டப்பகலில் பெண் தீவைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆட்டோவில் தப்பிய பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பேட்டை:
நெல்லை அருகே பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து பழையபேட்டை செல்லும் வழியில் ஆதம்நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையோரம் நேற்று மதியம் பெண்ணின் சடலம் தீயில் எரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் சிலர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் உடலானது முற்றிலும் தீயில் எரிந்து கரிக்கட்டையாக மாறியது. மாநகர தடயவியல் நிபுணர் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தார். பின்னர் பிணத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணுக்கு 55 வயதுக்கு மேல் இருக்கும் என்பதும், அவரது கழுத்து பகுதி துப்பட்டாவால் இறுக்கிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது. ஆனால், கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பழையபேட்டையில் இருந்து ஒரு ஆட்டோ வந்ததும், அதில் இருந்து 2 பெண்கள் இறங்கிச்சென்றதும், சிறிது நேரத்துக்குப்பிறகு ஒரு பெண் மட்டும் வந்து ஆட்டோவில் ஏறிச்சென்றதும் தெரியவந்தது. எனவே, ஆட்டோவில் தப்பிய அந்த பெண்தான் அவரை எரித்துக்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இன்ஸ்பெக்டர்கள் ஹரிஹகரன், ராஜாசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார், ஆட்டோவில் தப்பிய பெண் யார்? மற்றும் அந்த பெண்ணை அழைத்துச்சென்ற ஆட்டோ டிரைவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லை அருகே பட்டப்பகலில் பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story