கும்பகோணத்தில் 12 கோவில்களின் கருடசேவை நிகழ்ச்சி


கும்பகோணத்தில் 12 கோவில்களின்  கருடசேவை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 May 2022 1:32 AM IST (Updated: 4 May 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் 12 கோவில்களின் கருடசேவை நிகழ்ச்சி ஒரே இடத்தில் நடந்தது.

கும்பகோணம்
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து 12 கருட வாகனங்களின் உற்சவர் பெருமாள் புறப்பட்டு, ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு கும்பகோணம், டி.எஸ்.ஆர். பெரிய தெருவில், காசிக்கடை வர்த்தகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலில் 12 கருடசேவை நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது..
12 உற்சவர்கள்
 இதில் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி, சக்கரபாணிசுவாமி, ராமசுவாமி, ஆதிவராக சுவாமி, ராஜகோபாலசுவாமி, பாட்சாரியார் தெரு கிருஷ்ணசுவாமி, வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமசுவாமி, சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராமசுவாமி மற்றும் மல்லுகச்செட்டித்தெரு சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி, சீனிவாச பெருமாள், நவநீதகிருஷ்ணன் சுவாமிகளின் 12 உற்சவர்கள், கருட வாகனத்தில் எழுந்தருளி நேர் எதிரே ஆஞ்சநேயருடன் காட்சியளித்தனர்.
பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்கள் தரிசனம்
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கருட சேவையை யொட்டி கும்பகோணம் பெரிய தெருவில் அதிகாலையிலேயே பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story