கரும்பு லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் மறியல்


கரும்பு லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் மறியல்
x
தினத்தந்தி 4 May 2022 1:50 AM IST (Updated: 4 May 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணியை உடனடியாக தொடங்கக்கோரி கரும்பு லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

ஒரத்தநாடு
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பல ஏக்கர் நிலப்பரப்பிலான கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால், குருங்குளம் சர்க்கரை ஆலையில் சமீபத்தில் அரவை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் விளைந்த கரும்புகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும், தற்போது வெயில் கடுமையாக உள்ளதால் கரும்புகள் காய்ந்து வருகின்றன.
எனவே, குருங்குளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியை உடனடியாக தொடங்கக்கோரி தஞ்சை மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் விவசாயிகள் நேற்று காலை பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் ஒரத்தநாட்டை அடுத்த தென்னமநாடு பைபாஸ் சாலையில் கரும்பு ஏற்றிய லாரியை குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  சம்பந்தப்பட்ட ஆலை அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story