நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


நகைக்கடைகளில் அலைமோதிய  மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 4 May 2022 2:15 AM IST (Updated: 4 May 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

அட்சய திருதியையொட்டி நாகர்கோவிலில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவில்:
அட்சய திருதியையொட்டி நாகர்கோவிலில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அட்சய திருதியை நாள்
நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் மிகவும் புனிதமான நாட்களில் அட்சய திருதியையும் ஒன்றாகும். இந்த நாளில் நாம் எந்த பொருள் வாங்கினாலும், நம் வேண்டுதலாக கடவுளிடம் எதை முன் வைத்தாலும் அது பன்மடங்காக பெருகிக் கொண்டே இருக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.
பொதுவாகவே இந்த நாளில் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது அது மேலும், மேலும் பெருகும் என்று மக்களால் நம்பப்படுகிறது. அதனால் அட்சய திருதியை நாட்களில் குமரி மாவட்டத்தில் நகைக்கடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நகைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் மக்களின் கூட்டம் அலைமோதும். இதனால் பல கடைகளில் நீண்டவரிசை இருப்பதையும் காணலாம்.
வாடிக்கையாளர்கள் கூட்டம்
இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை தினம் நேற்று ஆகும். இதையொட்டி நாகர்கோவில் நகரில் உள்ள நகைக்கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும், தள்ளுபடி விற்பனையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
நேற்று காலையில் வழக்கத்தைவிட சில மணி நேரங்களுக்கு முன்பாகவே கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நகைக்கடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் காலை முதல் இரவு வரை வாடிக்கையாளர்கள் குவிந்தனர். பல நகைக்கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் காலை முதல் இரவு வரை வாடிக்கையாளர்கள் கூட்டம் தொடர்ந்து காணப்பட்டது. 
மகிழ்ந்தனர்
குறிப்பாக நாகர்கோவில் மீனாட்சிபுரம், கே.பி.ரோடு, கோர்ட்டு ரோடு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை உள்ளிட்ட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நகைக்கடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்திலும் கூட்டம் அலைமோதியது. தங்கள் வசதிக்கு ஏற்ப, விரும்பிய நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அவர்கள் வாங்கிச் சென்று மகிழ்ந்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதிலும் அட்சய திருதியையொட்டி நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Next Story