மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி
பூதப்பாண்டி அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக பலியானார். அவருக்கு உரிய நிவாரணம் கேட்டு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக பலியானார். அவருக்கு உரிய நிவாரணம் கேட்டு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒப்பந்த ஊழியர்
பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை வடக்கு மார்த்தால் பகுதியை சேர்ந்தவர் ஹைதர் அலி (வயது 60). இவருக்கு மனைவியும், 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஹைதர் அலி கடந்த 20 ஆண்டுகளாக பூதப்பாண்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் மார்த்தாள் காரியாங்கோணம் பகுதியில் ஒரு வீட்டில் 2 நாட்களாக மின் வினியோகம் தடைபட்டு இருந்தது.
மின்சாரம் தாக்கியது
இதையடுத்து பொறியாளரின் அழைப்பின் பேரில் மின் இணைப்பு சீரமைப்பு பணிக்காக ைஹதர் அலி சென்றார். இதற்காக அவர் மின் கம்பத்தில் ஏறி சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கியதில் ஹைதர் அலி கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதைகண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் ஹைதர் அலியை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹைதர் அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பொதுமக்கள் மறியல்
இதுபற்றி தகவல் அறிந்த பூதப்பாண்டி மின்வாரிய அலுவலகம் மூலம் பூதப்பாண்டி போலீசில் மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்து விட்டதாக புகார் செய்யப்பட்டது. இதையறிந்த உறவினர்கள் மற்றும் திட்டுவிளையை சேர்ந்த பொதுமக்கள் இறந்த ஹைதர் அலிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று திட்டுவிளை பஸ் நிலையம் அருகில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்துக்கு பூதப்பாண்டி பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் அசாருதீன் தலைமையில் எஸ்.டி.பி.ஐ. திட்டுவிளை நகர தலைவர் ஷேக் மைதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நகர தலைவர் அன்சாரி, பூதப்பாண்டி பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் மரிய அற்புதம் ஆகியோர் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுபற்றி அறிந்த பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே தகவல் அறிந்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா, மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெபகார் முத்து, உதவி பொறியாளர் சசிகுமார், மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இறந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுவை மின்சார வாரிய செயற்பொறியாளர் அரசுக்கு பரிந்துரைப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பின்னர், பூதப்பாண்டி போலீசார் ஹைதர் அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் திட்டுவிளை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story