கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்து அமித்ஷா-பசவராஜ் பொம்மை ஆலோசனை


கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்து அமித்ஷா-பசவராஜ் பொம்மை ஆலோசனை
x
தினத்தந்தி 4 May 2022 3:07 AM IST (Updated: 4 May 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். மந்திரிசபை விஸ்தரிப்பு 3 நாட்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு:கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். மந்திரிசபை விஸ்தரிப்பு 3 நாட்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மந்திரி சபை விரிவாக்கம்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) மே மாதம் தேர்தல் நடத்தப்படுகிறது.இதையொட்டி பா.ஜனதாவை பலப்படுத்தும் வகையில் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது பசவராஜ்பொம்மை முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். மேலும் கர்நாடக சட்டசபையில் 5 மந்திரி பதவி இடங்கள் காலியாக உள்ளன. இதனால் 5 மந்திரி பதவி இடங்களை நிரப்பவும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மந்திரிசபையை மாற்றி அமைக்கவும் பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. 

ஆனால் மூத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மந்திரி பதவி கேட்டு வருவதால், மந்திரிசபை விஸ்தரிப்பு தாமதம் ஆகி வருகிறது. இந்த நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூரு வந்தார். அவர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அமித்ஷா-பசவராஜ்பொம்மை சந்திப்பு

அதன் பிறகு அவருக்கு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள முதல்-மந்திரியின் அதிகாரபூர்வ இல்லத்தில் பசவராஜ் பொம்மை மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார். இதில் அமித்ஷா, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட பா.ஜனதாவின் முன்னணி நிர்வாகிகள், மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இந்த உணவு விருந்து முடிவடைந்ததும் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மந்திரிசபையில் காலியாக உள்ள 5 இடங்களையும் நிரப்ப அனுமதி வழங்குமாறு பசவராஜ் பொம்மை கேட்டதாக சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மந்திரிசபை மாற்றப்படலாம் என்று சொல்லப்பட்டது. இன்னும் 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில் ஆட்சி தலைமையை அதாவது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒற்றுமையாக பணியாற்ற...

அதனால் மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ‘முதல்-மந்திரியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. மந்திரிசபை விரிவாக்கம் 2 அல்லது 3 நாட்களில் நடைபெறும் என்று நான் கருதுகிறேன். அந்த முடிவுடன் தான் அமித்ஷா வந்துள்ளார் என்று நினைக்கிறேன். இதுகுறித்த முடிவை அவர் இங்கு அறிவிக்கலாம் அல்லது டெல்லி சென்று பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்’ என்றார். 

மேலும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அந்த கூட்டம் முதல்-மந்திரியின் இல்லத்திலேயே நடைபெற்றது.

அதில் கர்நாடக சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக்கொண்டார். மந்திரிசபை விரிவாக்கம் எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி சென்று மீண்டும் ஒரு முறை ஆலோசனை நடத்திய பிறகு மந்திரிசபை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

மந்திரிகள் நீக்கப்படலாம்

மந்திரிசபையில் இருந்து சில மந்திரிகள் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி அதன் மூலம் பா.ஜனதா அரசுக்கு நற்பெயரை அதிகரிக்கலாம் என்று கட்சி மேலிடம் கணக்கு போடுகிறது. மந்திரிசபையில் இருந்து முருகேஷ் நிரானி, சி.சி.பட்டீல், கோட்டா சீனிவாசபூஜாரி, பிரபுசவான் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்றும், புதிதாக எம்.எல்.ஏ.க்கள் பசனகவுடா பட்டீல் யத்னால், ரமேஷ் ஜார்கிகோளி, ராஜீவ், பூர்ணிமா சீனிவாஸ், ரேணுகாச்சார்யா, ராமதாஸ், தத்தாத்ரேயா பட்டீல் ரேவூர், ராஜூகவுடா, திப்பாரெட்டி உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என தெரிகிறது. 

மாற்றும் திட்டம் இல்லை

இந்த நிலையில் முதல்-மந்திரி மாற்றம் குறித்து கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறுகையில், ‘முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றும் திட்டம் இல்லை. அவரது தலைமையிலேயே வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி முடிவு செய்வார்’ என்றார். 

முன்னதாக முதல்-மந்திரியின் இல்லத்தில் வருகை தந்த அமித்ஷாவுக்கு பசவராஜ் பொம்மை குடும்ப உறுப்பினர்கள் அதாவது மனைவி, மகன், மகள், மருமகள் ஆகியோர் மாலை மற்றும் மைசூரு தலைப்பாகை அணிவித்து வரவேற்றனர்.

Next Story