அறச்சலூரில் பிரசித்தி பெற்ற பொன் அறச்சாலை அம்மன் கோவில் குண்டம் திருவிழா- பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு


அறச்சலூரில் பிரசித்தி பெற்ற பொன் அறச்சாலை அம்மன் கோவில் குண்டம் திருவிழா- பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு
x

அறச்சலூரில் பிரசித்தி பெற்ற பொன் அறச்சாலை அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.

அறச்சலூர்
அறச்சலூரில் பிரசித்தி பெற்ற பொன் அறச்சாலை அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.
பொன் அறச்சாலை அம்மன்
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் புகழ்பெற்ற பொன் அறச்சாலை அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனுக்கு படை வெட்டும் பத்திரகாளி என்ற சிறப்பு பெயரும் உண்டு. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொன் அறச்சாலை அம்மன் உள்பட எந்த கோவில்களிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படவில்லை.
கொரோனா விதிமுறைகள் தளர்வுக்கு பின் முதன்முறையாக அறச்சலூர் பொன் அறச்சாலை அம்மன் கோவில் குண்டம்- தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 18- ந்தேதி சுற்றுவட்டார கோவில்களில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தொடங்கியது. விநாயகர் கோவில், அம்மன் கோவில், பட்டத்தரசி அம்மன் கோவில், வெள்ளை பிள்ளையார் கோவில், புற்றிடங்கொண்ட பெருமாள் கோவில், பூலோக நாயகி அம்மன் கோவில், நாகமலை குமரர் ஆகிய கோவில்களில் இந்த அபிஷேகங்கள் நடந்தன. ஏப்ரல் 19-ந்தேதி அம்மன் அருள் உத்தரவு பெற்று பூச்சாட்டுதல் நடந்தது.
தொடர்ந்து பொன் அறச்சாலை அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. 30-ந்தேதி கோவில் கொடி கட்டப்பட்டது.
குண்டம்
நேற்று முன்தினம் மாலை காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று மாலை நடந்தது. இதையொட்டி பக்தர்கள் தீ மிதிப்பதற்கு வசதியாக 40 அடி நீளம் 3 அடி அகலம் 2 அடி உயரத்தில் குண்டம் தயார் செய்யப்பட்டது.
இதற்கிடையே அறச்சலூர்-கொடுமுடி கைக்காட்டி பகுதியில் கீழ்பவானி வாய்க்காலுக்கு பக்தர்கள் சென்றனர். குண்டம் இறங்க விரதம் இருந்தவர்களுக்கு அர்ச்சகர்கள் கலசம் முத்திரிப்பு பூஜைசெய்து காப்பு கட்டினார்கள். அதைத்தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். சிறுவர்-சிறுமிகளும் குண்டம் இறங்க காப்பு கட்டி ஊர்வலமாக வந்தனர். ஏராளமானவர்கள் கைக்குழந்தைகளையும் தங்கள் கைகளில் சுமந்து வந்தனர்.
பூமாலைகள் அணிந்து
குண்டம் இறங்க வரிசையில் நின்ற அனைவரும் மஞ்சள் நீர் அபிஷேகம் செய்தும், கைகளில் வேப்பிலைகளை வைத்துக்கொண்டும், கழுத்தில் மலர் மாலைகளை அணிந்து கொண்டும் நின்றனர்.
வேண்டுதல் நிறைவேற்றுவதாக பக்தர்கள் சிலர் அலகு குத்திக்கொண்டு வந்தனர். பறவை காவடி எடுத்தும், அக்னி குண்டம் எடுத்தும் பக்தர்கள் நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.
பூசாரி குண்டம் இறங்கினார்
மாலை 5 மணிக்கு குண்டம் பக்தர்கள் இறங்குவதற்கு தயாரானது. குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோவில் பூசாரி மகேந்திரன் பூங்கரகம் எடுத்துக்கொண்டு வந்து முதல் நபராக குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார்.  தொடர்ந்து முப்பாட்டுக்காரர் கருப்பணன், குதிரைக்காரர் நல்லசிவம் ஆகியோர் குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.
பின்னர் பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்ச்சைக்கடன் செலுத்தி பொன் அறச்சாலை அம்மனை வழிபட்டனர். இரவு 8 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் நேர்ச்சையை நிறைவேற்றினார்கள். தொடர்ந்து இரவில் அக்னி தணிப்பு அபிஷேக பூஜை நடத்தப்பட்டது.
பாதுகாப்பு
விழாவையொட்டி அறச்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதையொட்டி அறச்சலூரில் மாலை முதல் இரவு வரை வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மொடக்குறிச்சி தீயணைப்பு படை வீரர்கள், ஆரம்பசுகாதார நிலைய மருத்துவ குழுவினர் பணியில் இருந்தனர். கோவிலுக்கு வெளியில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் அகண்ட திரையில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தேர்திருவிழா
இன்று (புதன்கிழமை) மாவிளக்கு பூஜையும், அம்மை அழைத்தலும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) அதிகாலை பொங்கல் விழா தொடங்குகிறது. உற்சவர் சிலையுடன் முப்பாடு, படைக்கலம் குதிரை ஆகியவற்றுடன் மாவிளக்கு பூஜையும் தொடர்ந்து குதிரை துளுக்கு பிடிக்கும் நிகழ்வும் நடக்கிறது. காலையில் பொங்கல் பூஜை, மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து உற்சவர் தேர் ஏறும் நிகழ்வும் தொடர்ந்து தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. மாலையில் தேர் நிலை சேரும்.
6-ந் தேதி (வெள்ளிக்கிமை) மஞ்சள் அபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. இரவு கொடி இறக்கப்படுகிறது. 7-ந் தேதி (சனிக்கிழமை) மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Next Story