ஏற்காட்டில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி-பொக்லைன் எந்திரத்தை ஏற்றி சென்ற போது விபத்து
ஏற்காட்டில் பொக்லைன் எந்திரத்தை லாரியில் ஏற்றி சென்ற போது, மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்காடு:
ஏற்காட்டில் பொக்லைன் எந்திரத்தை லாரியில் ஏற்றி சென்ற போது, மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
லாரி டிரைவர்
சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36). லாரி டிரைவர். இவர் ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்த முரளி என்பவருக்கு சொந்தமான லாரியில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று ஏற்காடு ரோஜா தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொக்லைன் எந்திரத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு கிளியூர் நீர்வீழ்ச்சி அருகில் உள்ள தனியார் எஸ்டேட்டுக்கு சென்றார்.
அந்த எந்திரத்தின் ஆபரேட்டராக கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் (25) உடன் சென்றார். ஏற்காடு கிளியூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக சாலையின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில் லாரியின் மீது ஏற்றி வந்த பொக்லைன் எந்திரத்தின் மீது உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி லாரியின் டயர் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
மின்சாரம் பாய்ந்து சாவு
அதை கண்டு அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் வெங்கடேசன் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடனே லாரியில் இருந்த கண்ணன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த ஏற்காடு போலீசார், வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் வெங்கடேசன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story