மல்லிகுந்தம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை:1,800 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்-வீடு, அங்கன்வாடி மையத்தின் மீதும் மரங்கள் விழுந்தன
மல்லிகுந்தம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையினால் 1800 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. மேலும் வீடு, அங்கன்வாடி மையத்தின் மீதும் மரங்கள் விழுந்தன.
மேச்சேரி:
மல்லிகுந்தம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையினால் 1800 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. மேலும் வீடு, அங்கன்வாடி மையத்தின் மீதும் மரங்கள் விழுந்தன.
சூறைக்காற்றுடன் பலத்த மழை
மேச்சேரி அருகே மல்லிகுந்தம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது மல்லிகுந்தம்பிரிவு சாலையில் இருந்து மல்லிகுந்தம் பஸ் நிலையம் வரை சாலையில் உள்ள புளிய மரங்கள், வேப்பமரம் என 7 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மாடி வீட்டின் மீது புளிய மரம் சாய்ந்ததில், வீட்டின் மேல் பகுதி சேதமடைந்தது.
மல்லிகுந்தம் பஸ் நிலையம் அருகே தம்பி என்பவருடைய ஓட்டு வீட்டின் மீது மரம் சாய்ந்ததில் வீடு சேதம் அடைந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி கூரை மீது மரம் விழுந்தது. மேலும் அங்கன்வாடி மையத்தின் தடுப்பு சுவர் மீதும் மரம் சாய்ந்தது. தொடர்ந்து மரங்கள் விழுந்ததில் 7 மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால், அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மரங்களை அப்புறப்படுத்தினர். மின்கம்பங்களை சரி செய்தனர்.
வாழை மரங்கள்
மல்லிகுந்தம் வேங்கானூர் காட்டுவளவை சேர்ந்த குப்புசாமி என்பவருடைய தோட்டத்தில் இருந்த 815 வாழை மரங்கள், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருடைய தோட்டத்தில் இருந்த 719 வாழை மரங்கள், புள்ள சோளியூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருடைய தோட்டத்தில் இருந்த 300 வாழை மரங்கள் சூறைக்காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சாய்ந்து சேதம் அடைந்தன. இந்த நிலையில் நேற்று மழை, காற்றின் சேதம் அடைந்த இடங்களை சதாசிவம் எம்.எல்.ஏ. மற்றும் மல்லிகுந்தம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மாள் வைத்திலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் பகத்சிங், பொட்டனேரி வருவாய் ஆய்வாளர் மதியழகன், நிர்வாக அலுவலர் கல்பனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதே போல் காடையாம்பட்டி, தாலுகாவில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் காடையாம்பட்டி, சந்தப்பேட்டை, உம்பிளிக்கம்பட்டி, மாட்டுக்காரன் புதூர், தீவட்டிப்பட்டி, உள்பட பல்வேறு கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும் பல இடங்களில மரங்கள் சாய்ந்தன.
Related Tags :
Next Story