அட்சய திருதியையொட்டி சேலத்தில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது
அட்சய திருதியையொட்டி சேலத்தில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
சேலம்:
அட்சய திருதியையொட்டி சேலத்தில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
அட்சய திருதியை
அட்சய திருதியை அன்று தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் வாங்கினால் அதிர்ஷ்டம் என்றும், மேலும் அன்று நகைகள் வாங்கினால், ஆபரணங்கள் மற்றும் செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை நாளன்று தமிழகம் முழுவதும் மக்கள் கடைகளுக்கு சென்று நகைகள் வாங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை தினமான நேற்று, சேலத்தில் உள்ள நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஆர்வமுடன நகைகளை வாங்கினர்.
குறிப்பாக சேலம் புதிய பஸ் நிலையம், சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் வழக்கமாக காலை 10 மணிக்கு திறக்கப்படும் கடைகள், அட்சய திருதியையொட்டி காலை 5 மணிக்கே திறக்கப்பட்டன. ஒரு சில கடைகள் 7 மணிக்கு திறக்கப்பட்டன.
கூட்டம் அலைமோதியது
பல கடைகள் முன்பு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒரு சில கடைகளில் பாடல்களும் இசைக்கப்பட்டன. கடைகளில் தங்கம் வாங்க நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஓமலூர் ரோடு, சின்னக்கடை வீதிகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து நகைக்கடை உரிமையாளர்கள் கூறும் போது, ‘கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக அட்சய திருதியை தினத்தன்று சரியாக வியாபாரம் நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று நகைகள் அதிகம் விற்பனை ஆனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அட்சய திருதியை தினத்தன்று விற்பனை ஆனதில் 80 சதவீதம் தான் இந்த ஆண்டு விற்பனை ஆனது’ என்றார்கள்.
Related Tags :
Next Story