முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 4 May 2022 5:01 AM IST (Updated: 4 May 2022 5:01 AM IST)
t-max-icont-min-icon

முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

திருச்சி:

ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளில் முதன்மையானது ரம்ஜான் பண்டிகை ஆகும். 29 நாட்கள் இறைவனுக்காக முஸ்லிம்கள் நோன்பு இருந்த நிலையில், 30-வது நாளில் ஈதுல்பிதர் என்னும் ரம்ஜான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், முஸ்லிம்கள் பொது இடங்களில் கூடி தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை.
தற்போது நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி இயல்பு நிலையில் இருப்பதால், 2 ஆண்டுகளுக்கு பின், முஸ்லிம்கள் ஓரிடத்தில் திரண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தென்னூர் உழவர் சந்தை திடல்
திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருச்சி மாவட்டம் சார்பில் ஈகை திருநாள் பெருவிழா என்று நேற்று காலை 7 மணிக்கு கொண்டாடப்பட்டது. இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சபீர் அலி கலந்து கொண்டு ரம்ஜான் பெருநாள் உரையாற்றினார். மாவட்ட தலைவர் தஸ்தகீர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் என திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
திருச்சி கண்டோன்மெண்ட் பறவைகள் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் காலை 10 மணிக்கு முஸ்லிம்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதற்காக அங்கு ஆற்காடு இளவரசர் தர்மபரிபாலன காரியாலயம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்தனர்.
காதர் மொய்தீன் பங்கேற்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர் மொய்தீன், தமிழ்நாடு வக்புவாரிய தலைவர் அப்துல்ரகுமான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். ஆற்காடு நவாப் அறக்கட்டளை மூத்த அதிகாரி பஷீர் அகமது என்ற நவ்ஷாத் உள்பட திரளான முஸ்லிம்கள் இதில் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். தொழுகை முடிந்து வெளியே வந்தபோது ஏழை, எளியவர்களுக்கு தானம் வழங்கினார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஹிலூர் பள்ளிவாசலிலும் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது.
பல்வேறு பள்ளிவாசல்
இதேபோல் திருச்சி சவுக் முகமதியா பள்ளிவாசல், காந்திமார்க்கெட் பேகம் சாஹியா பள்ளிவாசல், பீரங்கி குளத்தெரு அமீர் பள்ளிவாசல், என்.எஸ்.பி. ரோடு ஹசன்பாக் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று ரம்ஜானையொட்டி சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது.
மணப்பாறையில் பாத்திமாமலையில் உள்ள ஈத்கா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜும் ஆ பெரியபள்ளிவாசல் இமாம் காதர் ஹீசைன் கருத்துக்களை எடுத்துரைத்தார். முஹம்மதியா பள்ளிவாசல் இமாம் ரஹ்மத்துல்லா சிறப்பு தொழுகையை நடத்தினர். பின்னர் ஹஜ்ரத் சிராஜ்தீன் சிறப்பு பிராத்தனை செய்தார். அப்போது நாடு செழித்து நல்ல மழை பெய்து விவசாயம் செழித்தோங்கிட வேண்டும், நோயின்றி மக்கள் வாழ்ந்திட வேண்டும், உலக நாடுகளில் இந்தியா வல்லமை பொருந்திய நாடாக மாறிட வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்தும் பிரார்த்தித்தனர். முடிவில் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர். தொழுகையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வையம்பட்டி, இளங்காகுறிச்சி, வளநாடு, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, மாகாளிப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Next Story