அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது
அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.
திருச்சி:
வாட்டி, வதைக்கும் வெயில்
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே பொதுமக்களை வெயில் வாட்டி, வதைக்க தொடங்கியது. திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் மாதமே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. திருச்சி மாவட்டத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கும். குறிப்பாக 24-ந்தேதி வரை வெயில் அனல் கக்கும்.
கோடை காலத்தில் பகலில் வீட்டில் மின்விசிறி இல்லாமலும் இருக்க முடிவதில்லை. வெயிலின் தாக்கத்தை குறைக்க, மின் விசிறியை சுழல விட்டாலும் அதில் இருந்து அனல் பறக்கும் வகையில் வெப்பக்காற்றுதான் உமிழப்படுகிறது. வெயில் காரணமாக, சற்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் பகலிலேயே ஏ.சி. ஓடிக்கொண்டிருக்கிறது.
கொளுத்தும் வெயில்
மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதையொட்டி பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான அளவை விட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதமே வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது. இதேபோல சென்னை, வேலூர், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 100 டிகிரியை தாண்டி ெவயில் கொளுத்துகிறது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி 105.26 டிகிரியும், 2-ந் தேதி 103.01 டிகிரியும், நேற்று 104 டிகிரியும் வெயில் அளவு பதிவாகி இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்
இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். இரவில் புழுக்கம் அதிகமாக காணப்படும். எனவே, பகல் நேரத்தில் பொதுமக்கள் உஷாராக, அத்தியாவசிய காரணங்களை தவிர வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மண்டையை பிளக்கும் வெயில் வெப்பத்தை தணிக்க இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவது நல்லது.
திருச்சி மாநகரில் நேற்று பகலில் வெயில் காரணமாக ஆட்கள் நடமாட்டமும் குறைந்தே காணப்பட்டது. பாதசாரிகள் பெரும்பாலும் குடை பிடித்தபடியும், குடை இல்லாத ெபண்கள் துப்பட்டா, சேலை முந்தானையை தலையில் போர்த்தியபடியும் செல்வதை காணமுடிந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க சன்கிளாஸ் எனப்படும் கருப்பு மூக்கு கண்ணாடி அணிந்து சென்றனர். பெண்கள் முகம் முழுவதும் துணியால் சுற்றியபடியும், கருப்பு கண்ணாடி அணிந்தும், சரும பாதுகாப்பிற்காக கையில் கிளவுஸ் அணிந்தும் சென்றனர்.
Related Tags :
Next Story