அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் குவிந்த மக்கள்
அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் குவிந்தனர்.
திருச்சி:
அட்சய திருதியை
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்றைய தினத்தில் வாங்கும் பொருட்கள் நிலைத்த செல்வமாக இருக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பொதுவாக மக்களின் சேமிப்பு திட்டங்களில் பிரதானமாக இருப்பது தங்கம்தான்.
எனவே, அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும்போது ஆண்டு முழுவதும் தங்கம் சேரும், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையிலும், ஆபரண தங்க நகைகளை ஆர்வத்துடன் வாங்குவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக அட்சய திருதியை களை இழந்து காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்ந்ததால், வழக்கமான உற்சாகத்தோடு மக்கள் தங்கம் வாங்கிட ஆயத்தமானார்கள்.
நகைக்கடைகளில் குவிந்தனர்
இந்தநிலையில் நேற்று அட்சய திருதியை தினம் ஆகும். இதையொட்டி திருச்சி மாநகரில் உள்ள நகைக்கடைகளில் தங்கம், வெள்ளி வாங்கிட பொதுமக்கள் திருவிழா கூட்டம் போல் திரண்டனர். திருச்சி சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, என்.எஸ்.பி. ரோடு, திருச்சி-கரூர் சாலை, அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகை வாங்க மக்கள் கூட்டம் களை கட்டியது.
மேலும் வழக்கமாக காலை 10 மணிக்கு திறக்கப்படும் நகைக்கடைகள் நேற்று அட்சய திருதியை என்பதால், அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. நேற்று தங்கம் விலையும் குறைந்திருந்தது. இதனால், பொதுமக்களும் உற்சாகம் அடைந்தனர். திருச்சியில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4,850 என்றும், 1 பவுன் ரூ.38,800-க்கும் விற்பனை ஆனது. அதே வேளையில் வெள்ளி 1 கிராம் ரூ.67.20-க்கும், 1 கிலோ ரூ.67,200-க்கும் விற்பனை ஆனது.
கவர்ச்சிகரமான அறிவிப்பு
திருச்சியில் உள்ள சில முன்னணி நகைக்கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 2 மாதத்திற்கு முன்பே முன்பதிவு தொடங்கி நேற்று நகைகளை விற்பனை செய்தனர். டிஜிட்டல் முறையிலும் முன்பதிவு செய்து, பணமும் செலுத்தப்பட்டதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் நகைக்கடைகள் சார்பில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கிராமிற்கு ரூ.100, ரூ.150 என விலையை குறைத்தும், செய்கூலி, சேதாரத்தில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி என்றும் அறிவித்திருந்தன.
மேலும் இத்தனை கிராம் தங்கம் வாங்கினால், வெள்ளிக்காசு இலவசம் என்றும் அறிவித்து விற்பனையை அமர்க்களப்படுத்தின. இன்னும் சில நகைக்கடைக்காரர்கள், மாத சீட்டு நடத்தி, வாடிக்கையாளர்களிடம் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட பணத்தை கட்ட செய்தும், அவற்றில் கடைசி 2 தவணைகளுக்கான பணத்தை நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்றும் நூதன விற்பனையை செய்தனர். பெரிய அளவில் நகை வாங்க வசதி இல்லாதவர்கள் 1 கிராம், 2 கிராம் என்ற அளவில் வாங்கி சென்றனர். சிலர் வெள்ளிக்கொலுசு, மெட்டி, மோதிரம் என்றும் வாங்கிச்சென்றனர்.
அரிசி, மளிகை பொருட்கள்
தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்க முடியாதவர்கள் வீட்டிற்கு தேவையான அரிசி, உப்பு, மஞ்சள் போன்றவற்றையும், சிலர் மளிகை பொருட்களையும், எலக்ட்ரானிக் பொருட்கள், பித்தளை பாத்திரங்களையும் வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story