மாவட்டம் முழுவதும் ரம்ஜான் சிறப்பு தொழுகை
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்:-
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகை
தமிழகம் முழுவதும் நேற்று முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகள் மற்றும் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்தபின்பு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
நாமக்கல்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்- சேலம் ரோடு ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையை இமாம் சாதிக் நடத்தினார். சிறப்பு தொழுகையில் பேட்டை பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள், நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை பேட்டை அஞ்சுமனே இஸ்லாமியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக தொழுகை நடந்த இடத்திற்கு வந்தனர்.
இதேபோல் நேற்று நாமக்கல் கோட்டை பள்ளிவாசல், மாருதிநகர் பள்ளிவாசல் என அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.
திருச்செங்கோடு
திருச்செங்கோட்டில் சங்ககிரி ரோட்டில் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசலில் இருந்து முத்தவல்லி முபாரக் தலைமையில் ஜமத்தார்கள் ஊர்வலமாக ஈத்கா மைதானத்திற்கு சென்றனர். ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்ததும் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதேபோல பாத்திமா பள்ளிவாசல், தொண்டிகரடு பள்ளிவாசல், கூட்டப்பள்ளி பள்ளிவாசல், பழைய முகம்மதியர் தெரு பள்ளிவாசலில் ரம்ஜான் தொழுகை நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகை முன்னாள் சேர்மன் நடேசன் அலுவலகத்தில் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூரில் சகன்ஷா அவுலியா தர்கா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஊர்வலம் மற்றும் சிறப்பு தொழுகை நடந்தது. பரமத்திவேலூர் சகன்ஷா அவுலியா தர்கா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. முன்னதாக பள்ளிவாசலில் இருந்து அண்ணா சாலை வழியாக இஸ்லாமிய மக்கள் ஊர்வலமாக புறப்பட்டு பஸ்நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரமத்திவேலூர் பள்ளி வாசல் நிர்வாக கமிட்டி தலைவர் சவான் சாகிப், செயலாளர் இக்பால், பரமத்திவேலூர் சகன்ஷா அவுலியா தர்கா பள்ளி வாசல் உறுப்பினர்கள் சலீம், முபாரக், ஆபித், ஜின்னா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இதேபோல் நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
Related Tags :
Next Story