15 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.24.75 லட்சம் அபராதம் விதிப்பு
சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 15 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.24.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் பைகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 35 ஆயிரத்து 635 வணிக நிறுவனங்கள், கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 15 ஆயிரத்து 29 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.24 லட்சத்து 75 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக, தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் பொது சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மொத்தம் 557 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.8 லட்சத்து 63 ஆயிரத்து 350 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story