விமான நேரம் குறித்த தகவல்கள் மற்றும் உணவு வசதி பெற சென்னை விமான நிலையம் சார்பில் புதிய செயலி
சென்னை விமான நிலையத்தில், பயணிகள் விமானம், பயண நேரம் குறித்த தகவல்கள் மற்றும் உணவு வசதி பெற, புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் நேற்று நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
சென்னை விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு சென்னையில் விமான சேவை சகஜ நிலைக்கு கொண்டு வர எடுத்த நடவடிக்கையால், உள்நாட்டு முனையத்தில் 95 சதவீதமும், பன்னாட்டு முனையத்தில் 60 சதவீதமும் பயணிகளின் வருகை உயர்ந்து உள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடியவர்களுக்காக, மல்டிலேவல் கார் பார்க்கிங் கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 2,200 கார்கள் நிறுத்த முடியும்.
விமான நிலைய விரிவாக்கம்
மேலும், முனையங்கள் கார் பார்க்கிங், மெட்ரோ நிலையம் ஆகியவற்றை இயக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் உணவு, சினிமா திரையரங்கம் அடங்கிய வணிக வளாகமும் அமைக்கப்பட உள்ளது. இந்த கார் பார்க்கிங் பணிகள் ஜூன் மாதம் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
விமான நிலைய விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வருகிறது. நவீன வசதிகளுடன் கொண்ட பன்னாட்டு முனையங்களாக விரைவில் செயல்படும். இதனால் 3½ கோடி பயணிகள் கையாள கூடிய வசதி செய்யப்பட்டு உள்ளது. விமானங்கள் தரையிறங்கியதும் விரைவாக நிறுத்துமிடம் செல்ல கூடுதல் டாக்சிபாதைகள் மேம்படுத்தப்படும்.
புதிய செயலி அறிமுகம்
விமான சேவைகள் அதிகரிப்பதால், நவீன வசதிகள் மேம்படுத்த வேண்டியதாக உள்ளது. பாதுகாப்பு சோதனை, உடமைகள் சோதனை பகுதிகளில் பயணிகளுக்கு ஏற்படும் கால நேரம் தாமதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் விமான பயண நேரம், போர்டிங் வசதி, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உணவு, போன்றவற்றை பயணிகளின் வசதிக்காக, புதிய செயலி விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ அறிமுகம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கிடையே தொடர்பு கொள்வதற்காக டி.எம்.ஆர். எனும் ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ வசதி சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய தொழில் நுட்ப சேவை ‘டெட்ரா’ என்ற ஐரோப்பா தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை விமான முனையம் மற்றும் விமான ஓடுபாதைகளிலும் தடையில்லா சேவை கிடைப்பதற்காக இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் விமான நிறுவனங்கள், தொழில் நுட்ப வல்லுனா்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என அனைவருக்கும், இந்த சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருவிகள் மூலம் நடக்கும் சேவைகளை வெளிநபர்கள் யாரும் இந்த அலைவரிசையை ஒட்டு கேட்க முடியாது என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story