சென்னை புறநகரில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - இஸ்லாமியர்களுக்கு இனிப்புகள் வழங்கி மேயர் வாழ்த்து


சென்னை புறநகரில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - இஸ்லாமியர்களுக்கு இனிப்புகள் வழங்கி மேயர் வாழ்த்து
x
தினத்தந்தி 4 May 2022 10:40 AM IST (Updated: 4 May 2022 10:40 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகரில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு இனிப்புகள் வழங்கி மேயர் வசந்தகுமாரி வாழ்த்துகள் தெரிவித்தார்.

தாம்பரம், 

சென்னை புறநகர் பகுதிகளில் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு அனைத்து மசூதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை பம்மல், பெருங்களத்தூர், செம்பாக்கம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மசூதிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர்.

தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை சாலை மசூதியில் சிறப்பு தொழுகையில் கலந்துகொண்ட இஸ்லாமியர்களுக்கு இனிப்புகள் வழங்கி தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி வாழ்த்துகள் தெரிவித்தார். 50-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் தாம்பரம் யாகூப், தாம்பரம் வணிகர் சங்க துணைத்தலைவர் எம்.கே.காஜா மொய்தீன், மசூதி நிர்வாகி அபுபக்கர் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் உடனிருந்தனர்.

அதேபோல், ஆலந்தூரில் உள்ள திடல் மற்றும் மசூதிகளில் நடந்த பெருநாள் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் இஸ்லாமியர்களுக்கு பேரீச்சை பழங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மண்டல குழு தலைவர் என். சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் பி.குணாளன், முரளி கிருஷ்ணன், சீனிவாசன் உள்பட பலர் இருந்தனர்.

Next Story