பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி மாணவர்கள் மறியல்
பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி வாணாபுரம் அருகே மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.
வாணாபுரம்
பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி வாணாபுரம் அருகே மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.
வாணாபுரம் அருகே உள்ள கீழ்கச்சிராப்பட்டு பகுதியிலிருந்து சுமார் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டாம்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் அரசு பஸ்களில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் சில நேரங்களில் பஸ்கள் நிற்பதில்லை என்றும சில பஸ்கள் சரிவர இயக்கப்படுவதில்லை என்றும் மாணவர்கள் ஏறிக் கொண்டிருக்கும்போதே பஸ்கள் நகர்த்தப்படுவதால் விபத்து ஏற்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இதனால் பள்ளி நேரங்களில் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். தொடர்ந்து இதே நிலை நீடித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் நேற்று காலை திடீரென திருவண்ணாமலை- மணலூர்பேட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தச்சம்பட்டு போலீசார் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி தொடர்ந்து பஸ்கள் சரிவர இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமரசம் ஏற்பட செய்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் அப்பகுதியில் 30 நிமிடத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story