வேலூர் மாவட்டத்தில் மேலும் 7 இடங்களில் அரசு மணல் குவாரி தொடங்க நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் மேலும் 7 இடங்களில் அரசு மணல் குவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நீர்வள ஆதாரத்துறை விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் லெனின் பிரான்சிஸ் தெரிவித்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் மேலும் 7 இடங்களில் அரசு மணல் குவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நீர்வள ஆதாரத்துறை விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் லெனின் பிரான்சிஸ் தெரிவித்தார்.
மணல் விற்பனை தொடக்கம்
வேலூரை அடுத்த பெருமுகை-அரும்பருத்தி பாலாற்றங்கரையோரம் 5 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் இருந்து டிராக்டர்கள், லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு, அவை பெருமுகையில் அமைக்கப்பட்டுள்ள மணல் விற்பனை மையத்தில் (யார்டு) கடந்த சில நாட்களாக சேமித்து வைக்கப்பட்டன. இந்த நிலையில் பெருமுகை மணல் குவாரி செயல்படத் தொடங்கியது.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு கனிமவளங்கள் துணை இயக்குனர் பெர்னான்டஸ், வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, வேலூர் தாசில்தார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீர்வளஆதாரத்துறை விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் லெனின் பிரான்சிஸ் தலைமை தாங்கி மணல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு யூனிட் ரூ.3,150
பெருமுகை மணல் குவாரியில் இருந்து மணல் பெறுவதற்கு இ-சேவை மையத்தின் மூலம் கடந்த மாதம் 29-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்நாளில் 150 யூனிட் மணல் பெற விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து தினமும் மணல் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். ஒரு யூனிட் மணல் ரூ.3,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேரடியாக மணல் விற்பனை செய்யப்படாது. ஆன்லைன் மூலம் மட்டுமே மணல் விற்பனை செய்யப்படுவதால் எவ்வித முறைகேடும் நடக்க வாய்ப்பு கிடையாது.
தமிழகத்தில் உள்ள எந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஆன்லைனில் விண்ணப்பித்து மணல் பெற்று செல்லலாம். பொதுமக்களுக்கு மணல் தேவைப்பட்டால் இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கும்போது கட்டிடம் தொடர்பான வரைப்படத்தை இணைக்க வேண்டும். மேலும் மணல் எடுத்து செல்லும் வாகனத்தின் எண்ணையும் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். மணல் வழங்கும் நாளில் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதனை காண்பித்து மணலை பெற்றுக்கொள்ளலாம்.
7 இடங்களில் மணல் குவாரிகள்
மாட்டுவண்டி தொழிலாளர்கள் குவாரியில் இருந்து மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஒருமாதத்திற்கு பின்னர் 10 சதவீதம் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குவாரியில் இருந்து மணல் அள்ள அனுமதிக்கப்பட உள்ளனர். அரும்பருத்தி மற்றும் பெருமுகை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் மேல்மொணவூர், கார்ணாம்பட்டு, காங்கேயநல்லூர், தலையாரம்பட்டு, கந்தனேரி, அனங்காநல்லூர்-கூத்தம்பாக்கம், சித்தாத்தூர் ஆகிய 7 இடங்களில் மணல் குவாரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், உதவி பொறியாளர்கள் சுரேஷ்குமார், சம்பத், தீபாவாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story