கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க 8 போலீஸ் தனிப்படைகள் அமைப்பு: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்


கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க 8 போலீஸ் தனிப்படைகள் அமைப்பு: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
x
தினத்தந்தி 4 May 2022 6:09 PM IST (Updated: 4 May 2022 6:09 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க புதிதாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க புதிதாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தனிப்படை
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை, லாட்டரி மற்றும் சட்டவிரோதமான மதுபான விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து உட்கோட்டத்திலும் புதிதாக சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய 8 தனிப்படைகள் அமைக்கப்படுகிறது. இந்த தனிப்படையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு கஞ்சா, புகையிலை, லாட்டரி மற்றும் சட்டவிரோதமான மதுபான விற்பனை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தனிப்படையினர் மூலம் மேற்படி குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த பகுதி போலீஸ் நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
93 பேர் கைது
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 61 வழக்குகள் பதிவு செய்து, 93 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 67 கிலோ கஞ்சா, ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரிகள் பயன்படுத்திய 3 கார்கள் மற்றும் 16 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அதே போன்று இந்த ஆண்டு இதுவரை புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 718 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 7,050 கிலோ புகையிலைப் பொருட்கள், விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 11 கார்கள் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 1916 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குண்டர் சட்டம்
இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உள்பட மொத்தம் 84 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை, ரவுடியிஸம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story