அனுமன் பஜனை விவகாரத்தில் கைதான நவ்நீத் ரானா எம்.பி.க்கு ஜாமீன்- மும்பை கோர்ட்டு தீர்ப்பு


படம்
x
படம்
தினத்தந்தி 4 May 2022 6:42 PM IST (Updated: 4 May 2022 6:42 PM IST)
t-max-icont-min-icon

அனுமன் பஜனை தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நவ்நீத் ரானா எம்.பி., ரவி ரானா எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன் வழங்கி மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மும்பை, 
அனுமன் பஜனை தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நவ்நீத் ரானா எம்.பி., ரவி ரானா எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன் வழங்கி மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 
 தேச துரோக வழக்கு
மராட்டியத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கெடு விதித்த பரபரப்புக்கு மத்தியில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டு முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யும், அம்பாசமுத்திரம் அம்பானி பட நடிகையுமான நவ்நீத் ரானாவும், அவரது கணவர் ரவி ரானா எம்.எல்.ஏ.வும் அறிவித்தனர். 
இந்துத்வா பெயரில் வாக்குகளை சேகரித்த சிவசேனா, அந்த கொள்கையில் இருந்து விலகி செல்வதை உணர்த்தும் வகையில் இவ்வாறு செயல்பட போவதாக கூறியதால் மும்பையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து கடந்த மாதம் 23-ந் தேதி இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்துதல் மற்றும் தேசத்துரோக பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 மனு தாக்கல்
இந்தநிலையில் சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு நவ்நீத் ரானா, ரவி ரானாவும் மனு தாக்கல் செய்தனர்.
விசாரணையின் போது, ரானா தம்பதியர் சார்பில் ஆஜரான வக்கீல், “முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் தனிப்பட்ட வீட்டு முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அறிவித்தது, எந்த வகையிலும் இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தியதாக கருத முடியாது, மேலும் அவர்கள் மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது” என்றும் வாதிட்டார். 
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸ் தரப்பு வக்கீல், ரானா தம்பதியரின் திட்டம் ஆளும் அரசாங்கத்திற்கு சவால் விடுவதற்கான ஒரு பெரிய சதி. மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சியான பா.ஜனதாவும், உத்தவ் தாக்கரேவின் அரசியல் எதிரிகளும், முதல்-அமைச்சர் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற சூழலை உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். 
 ஜாமீன் கிடைத்தது 
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில்  தீர்ப்பு வழங்கப்பட்டது. 
அப்போது ரானா தம்பதியருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீனில் இருக்கும் போது மனுதாரர்கள் ஏற்கனவே செயல்பட்டதை போன்ற குற்றத்தை செய்யக்கூடாது என்றும், வழக்கு தொடர்பான எந்த விஷயத்திலும் பத்திரிகையாளர்களிடம் பேசக்கூடாது என்றும் நிபந்தனைகளை நீதிபதி பிறப்பித்தார். 
---------------

Next Story