பிரியாணியை எலி தின்ற கடையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
பிரியாணியை எலி தின்ற கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு படையினர், கடை உரிமையாளர் தங்கள் அறிவுரையை ஏற்று சரி செய்யாவிடில் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.
திருவண்ணாமலை
பிரியாணியை எலி தின்ற கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு படையினர், கடை உரிமையாளர் தங்கள் அறிவுரையை ஏற்று சரி செய்யாவிடில் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.
திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் உள்ள உணவு பரிமாறும் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த பிரியாணியை எலி ஒன்று திண்பது போன்ற வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் பரவியது. இது குறித்து தினத்தந்தியிலும் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில் சிக்கையராஜா மற்றும் சிவபாலன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையில் சமையலறை, உணவு சாப்பிடும் இடம், உணவு பார்சல் செய்யும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். சமையலறை போன்றவற்றை சுத்தமாக வைத்து கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் நோட்டீசு வழங்கினர்.
இது குறித்து மாவட்ட நியமன அலுவலரிடம் கேட்ட போது, ‘‘சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் எலி போன்றவை கடைக்குள் உள்ளே வராத அளவிற்கு கடையில் சில மாற்றங்களை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் சமையலறை போன்றவை சுத்தமாக வைத்து கொள்ளவும் உத்தரவிட்டது.
15 நாட்களுக்குள் கடையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறிய மாற்றங்களை செய்ய காலகெடு வழங்கப்பட்டு உள்ளது. பின்னர் மேற்கொள்ளப்படும் ஆய்வின் போது மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றால் அந்த கடையின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் லைசன்ஸ் ரத்து செய்யப்படும். மேலும் அதன் அருகில் உள்ள உணவகங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. அங்கும் சமையலறையை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறை வழங்கப்பட்டு உள்ளது’’ என்றார்.
Related Tags :
Next Story