பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,290 மாணவர்கள் எழுதுகின்றனர்
நீலகிரி மாவட்டத்தில் 39 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,290 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 39 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,290 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் முறையாக திறக்கப்படாததால், பொதுத்தேர்வும் முறையாக நடத்தப்படவில்லை. தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் நடப்பு கல்வி ஆண்டில்(2021-22) பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாக பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில் நாளை(வியாழக்கிழமை) பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கி வருகிற 28-ந் தேதி முடிவடைகிறது.
7,290 மாணவ-மாணவிகள்
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 39 மையங்களில் நடக்கிறது. 7 ஆயிரத்து 290 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தொடங்கி, வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. நீலகிரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 58 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை 7 ஆயிரத்து 533 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற 10-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு 39 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை 7 ஆயிரத்து 107 பேர் எழுதுகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசார்
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி நசுரூதீன் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 21 ஆயிரத்து 930 பேர் எழுதுகிறார்கள். பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்காக 6 வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பு மையங்களும் (கட்டுக்காப்பு அறைகள்), 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 7 கட்டுக்காப்பு அறைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது என்றார்.
Related Tags :
Next Story