வாகனங்களை மறித்து காட்டுயானை அட்டகாசம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை மறித்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை மறித்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வனப்பகுதியில் வறட்சி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. மேலும் வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் உணவு தேடி சமவெளி பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி, குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.
இவை அவ்வப்போது கூட்டமாகவும், தனியாகவும் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வருகின்றன. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணிக்கு கோத்தகிரியில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அரசு பஸ், மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
கண்ணாடியை உடைக்க முயற்சி
முள்ளூர் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே வாகனங்களை மறித்தவாறு காட்டு யானை ஒன்று நின்றது. உடனே டிரைவர் சற்று தொலைவிலேயே பஸ்சை நிறுத்தினார். ஆனால் பஸ்சை கண்டு மிரண்ட காட்டுயானை ஓடி வந்து முன்பக்க கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பயத்தால் அலறினர். பின்னர் டிரைவர் இருக்கைக்கு அருகில் சென்ற காட்டுயானை, அங்கிருந்த கண்ணாடியை உடைக்க முயன்றது. இதையடுத்து பயணிகள் கூச்சல் போட்டு விரட்ட முயற்சி செய்தனர். ஆனாலும் பஸ்சின் அருகே தொடர்ந்து நின்ற காட்டுயானை, அதன்பிறகு மீண்டும் சாலையின் நடுவே சென்று அட்டகாசம் செய்தது.
தீ மூட்டினர்
இதற்கிடையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளதால், அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. சிலர் தங்களது வாகனங்களுக்கு அருகில் யானை வராமல் இருக்க சாலையின் இருபுறமும் தீ மூட்டி வைத்தனர்.
இதை அறிந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலையின் குறுக்கே நின்று கொண்டு இருந்தது. இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் யானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. அதற்கு பின்னரே வாகனங்கள் அங்கிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.
Related Tags :
Next Story