சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ரூ.300 கோடி லஞ்சம் பரிமாற்றம்; சித்தராமையா பரபரப்பு பேட்டி
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ரூ.300 கோடி லஞ்சம் பரிமாற்றம் நடந்துள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
40 சதவீத கமிஷன்
உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆகியோர் பெங்களூருவுக்கு வந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அரசை பாராட்டியுள்ளனர். இதன் மூலம் 40 சதவீத கமிஷன் அரசு என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய 40 சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என்று காண்டிராக்டர்கள் சங்கம் கூறியுள்ளது. தீவன கொள்முதல், பெங்களூரு மாநகராட்சி பணிகளுக்கும் 40 சதவீத கமிஷன் பெறப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
40 சதவீத கமிஷன் கொடுக்க முடியாததால் காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார். அதனால் மந்திரி ஈசுவரப்பா ராஜினாமா செய்தார். காண்டிராக்டர்கள் சங்கத்தினர் 40 சதவீத கமிஷன் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். 10 மாதங்கள் ஆகியும் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை. 40 சதவீத கமிஷன் பெற இந்த அரசுக்கு பிரதமர் மோடி உரிமம் வழங்கியுள்ளாரா?.
பட்டியல் ரத்து
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதில் 545 பேர் தேர்வு செய்யப்பட்ட பெயர் பட்டியலை அரசு அறிவித்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக அரசே கூறி அந்த பட்டியலை ரத்து செய்துள்ளது. மறு தேர்வு நடத்துவதாக அரசு கூறியுள்ளது. போலீஸ் பணி நியமன பிரிவு கூடுதல்
டி.ஜி.பி. அம்ருத் பால் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தக்குமார் வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் இந்த 2 அதிகாரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டனர் என்பது மேல்நோட்டமாக தெரியவந்துள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய முறைகேட்டை செய்ய முடியாது. அந்த போலீஸ் அதிகாரிகள் 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்திருக்க வேண்டும். அரசின் ஆதரவு இல்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்காது.
நீக்க வேண்டும்
இந்த வழக்கில் சி.ஐ.டி. போலீசார் இதுவரை 29 பேரை கைது செய்துள்ளனர். ஆனால் அந்த போலீஸ் அதிகாரிகள் 2 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டிற்கு முதல்-மந்திரி மற்றும் போலீஸ் மந்திரி ஆகியோர் தான் பொறுப்பு. இந்த முறைகேட்டில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணுக்கு தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. அதனால் அவரை உடனடியாக மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ரூ.300 கோடி லஞ்சம் பரிமாற்றம் நடந்துள்ளது. அதனால் சி.ஐ.டி. விசாரணையால் நியாயம் கிடைக்காது. எனவே, ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story