‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ஆவுடையாள்புரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், தோட்டவிளை அருகே தூத்துக்குடி- கன்னியாகுமரி சாலையில் நம்பி ஆற்று பாலத்தின் கீழ்புறம் உள்ள பெயா் பலகையில் நம்பி ஆறு என்பதற்கு ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்டுள்ளதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதற்கு உடனடி தீர்வாக, தற்போது ஆங்கிலத்தில் சரியாக எழுதப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
பஸ்கள் நின்று செல்லுமா?
நெல்லை மாவட்டம் மானூரை தாலுகாவாக மாற்றிய பின்னர் எஸ்.எப்.எஸ்., எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர் மானூரில் அனைத்து பஸ்களும் நின்று சென்றன. காலப்போக்கில் எஸ்.எப்.எஸ்., எக்ஸ்பிரஸ் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து மேற்கண்ட பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜா, மானூர்.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
சேரன்மாதேவி தாலுகா கீழ பாப்பாக்குடியில் மாடுகள், பன்றிகள் சாலையிலும், தெருக்களிலும் இரவு நேரத்தில் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கமல், கீழ பாப்பாக்குடி.
ஆபத்தான மின்கம்பம்
அம்பை- தென்காசி மெயின் ரோடு பொட்டல்புதூர் மெயின் பஜார் பகுதியில் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் ஆபத்தான முறையில் உள்ளது. இதனால் வியாபாரிகள், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்ஜத், முதலியார்பட்டி.
மின்மாற்றிகளை சுற்றி கம்பி வேலி
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் சந்தன மாரியம்மன், பிள்ளையார் கோவில், கொத்தாள வீராசாமி கோவில், மூன்று மதகு, குறிஞ்சாக்குளம் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் இருக்கின்றன. இந்த மின்மாற்றிகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தப்பித் தவறி தொட்டாலோ அல்லது கால்நடைகள் அதன் மீது கழுத்தை வைத்து உரசினாலோ உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அனைத்து மின்மாற்றிகளுக்கும் கம்பி வேலை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தட்சிணாமூர்த்தி, கீழக்கலங்கல்.
ஆபத்தான நிலையில் பள்ளி சுவர்
செங்கோட்டையில் வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு சத்துணவு கூடம் பகுதியில் காம்பவுண்டு சுவர் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக அந்த சுவரை இடித்து விட்டு புதிய சுவர் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேந்திர மாரியப்பன், செங்கோட்டை.
மூடப்படாத பள்ளம்
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் தெரு குழாயில் தண்ணீர் வராததால், திருமண மண்டபம் அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டி பார்த்தனர். அதன் பின்னர் இதுவரை எந்த வேலையும் நடைபெறவில்ைல. பள்ளமும் மூடப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் தவறி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, குடிநீர் பணிகளை விரைவில் சரிசெய்து பள்ளத்தையும் மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவனிராஜ், அடைக்கலாபுரம்.
Related Tags :
Next Story