சர்வர் கோளாறால் மின்கட்டணம் செலுத்துவதில் தாமதம்
சர்வர் கோளாறால் மின்கட்டணம் செலுத்துவதில் தாமதம்
போடிப்பட்டி:
உடுமலை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள கட்டண வசூல் மையத்தில் சர்வர் கோளாறால் மின் கட்டணம் செலுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கட்டண வசூல் மையம்
உடுமலை ஏரிப்பாளையம் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டண வசூல் மையம் செயல்பட்டு வருகிறது. காலை 8.30 முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 1.30 முதல் 2.30 மணி வரையிலும் மின் கட்டணம் செலுத்தலாம். இந்தநிலையில் நேற்று இந்த மையத்தில் சர்வர் கோளாறால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த முடியாமல் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான ஏழை நடுத்தர மக்கள் கடைசி நாளிலேயே மின் கட்டணம் செலுத்த வருகின்றனர். அதிலும் வேலைக்கு செல்பவர்கள் காலை நேரத்தில் மின் கட்டணம் செலுத்தி விட்டு வேலைக்கு சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் வருகின்றனர்.ஆனால் இங்கு 10-க்கும் மேற்பட்ட கவுண்ட்டர்கள் உள்ள நிலையில் ஒன்று மட்டுமே திறந்திருந்தது.அதிலும் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருந்தது. இதனால் பலரும் கட்டணம் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அவர்களிடம் ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்துமாறு மின் வாரிய ஊழியர்கள் கூறினர்.ஆனால் சில வேளைகளில் ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்தும் போது சில நாட்களுக்குப் பிறகு கட்டணம் செலுத்தப்படவில்லை என்று பணம் திரும்பி வந்து விடுகிறது. இதனால் அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பராமரிப்பு
கடந்த சில நாட்களாகவே கட்டண வசூல் மையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.நேற்று நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு பழுது நீக்கப்பட்டு கட்டணம் வசூலித்தனர். மேலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக ஒரு கவுண்ட்டர் திறக்கப்பட்டது. எனவே மின் கட்டண வசூல் மையத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு பழுது ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.காலை நேரத்தில் கூடுதல் கவுண்டர்கள் திறந்து பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
Related Tags :
Next Story