வேறுபகுதிக்கு மாற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
வேறுபகுதிக்கு மாற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
அனுப்பர்பாளையம், மே.5-
திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் இடம் மாறுதலை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
திருமுருகன்பூண்டி சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும் பழைய பேரூராட்சி அலுவலக கட்டிடத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லை. இதையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் வேறு இடத்தில் கட்டுவதற்கு கருத்து கேட்கப்பட்டது. மேலும் ராக்கியாபாளையத்தில் உள்ள ஒரு இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டு அங்கு மண் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதை கண்டித்து பொதுமக்கள் சார்பில் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி கமிஷனரிடம் மனு வழங்க பொதுமக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகும் கமிஷனர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நகராட்சி தலைவர் குமார் மற்றும் கமிஷனர் முகம்மது சம்சுதீன் வரும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உரிய நடவடிக்கை
அதன் பின்னர் வந்த கமிஷனரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதன் பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story