ராஜ்தாக்கரே வீட்டு முன் குவிந்த தொண்டர்கள்-தள்ளுமுள்ளுவில் பெண் போலீஸ் கீழே விழுந்தார்


மும்பை பாந்திரா பகுதியில் உள்ள மசூதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த காட்சி.
x
மும்பை பாந்திரா பகுதியில் உள்ள மசூதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த காட்சி.
தினத்தந்தி 4 May 2022 10:31 PM IST (Updated: 4 May 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

ராஜ் தாக்கரே வீட்டு முன் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது பெண் போலீஸ் கீழே விழுந்தார்.

மும்பை,
ராஜ் தாக்கரே வீட்டு முன் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது பெண் போலீஸ் கீழே விழுந்தார்.  
பலத்த பாதுகாப்பு
மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி இன்று நவநிர்மாண் சேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  இதையொட்டி மும்பையில் அனைத்து மசூதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 
இதைத்தவிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வீட்டின் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்நிலையில், கட்சி தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். இதன் காரணமாக, அங்கு கூட்டம் கூடாமல் இருக்க போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தள்ளுமுள்ளு
அப்போது காரில் வந்த தானே நகர கட்சி தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே மற்றும் பிரமுகர் சந்தோஷ் தூரி ஆகியோர் ராஜ்தாக்கரேயின் வீட்டின் உள்ளே நுழைய முயன்றார். அப்போது கட்சி தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 இந்த தள்லுமுள்ளுவில் சிக்கி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் கீழே விழுந்தார். இதற்கிடையே போலீசார் கைது செய்ய வருவதை அறிந்த சந்தீப் தேஷ்பாண்டே உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 
இந்த நிலையில் போலீசார் கட்சி தொண்டர்கள் சிலரை பிடித்து   சிவாஜி பார்க் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.
இதற்கிடையே, கீழே விழுந்த பெண் போலீசை மற்ற போலீசார் மீட்டனர். தகவல் அறிந்த கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வீட்டில் இருந்து வெளியே வந்தார். மேலும் பெண் போலீசிடம் அக்கரையுடன் உடல் நலம் விசாரித்து, ஆசுவாசப்படுத்தினார்.

Next Story