பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்காரருக்கு நூதன முறையில் அபராதம்
ராணிப்பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரருக்கு, அபராதமாக 2,000 மஞ்சப் பைகளை வாங்கி கொடுக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரருக்கு, அபராதமாக 2,000 மஞ்சப் பைகளை வாங்கி கொடுக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்த்திட, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கடைகளில் திடீர் செய்து பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி அபராதம் விதித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ராணிப்பேட்டை நகராட்சி மீன் மார்க்கெட், காந்தி ரோட்டில் உள்ள கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்களுக்கும், கடைகளுக்கும் விற்பனை செய்து வருவதை நேரில் பார்த்தார். இதையடுத்து கடையில் இருந்த 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
நூதன அபராதம்
விற்பனை செய்த கடைக்காரருக்கு நூதன முறையில் அபராதம் விதிக்கப்பட்டது. கடைக்காரர் 2,000 மஞ்சப்பைகளை வாங்கி ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் வழங்கிடுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் கடைக்காரரும் மஞ்சப்பை வாங்கித்தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப் போவது இல்லை எனவும் கடைக்காரர் தெரிவித்தார்.
தொடர்ந்து ராணிப்பேட்டையில் உள்ள கடைகளை கண்காணிக்கவும், மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து விற்பனை செய்யும் கடையினை சீல் வைக்கவும், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜை கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது ராணிப்பேட்டை நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story