பிளஸ்-2 மாணவர் தற்கொலை
பிளஸ்-2 மாணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்,
சி.பி.எஸ்.இ. தேர்வு தொடங்க உள்ள நிலையில், அந்த வழிக்கல்வியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். தனது பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை என அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிளஸ்-2 மாணவர்
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஈசுவரி. இவர்களது மூத்த மகன் நித்தீஷ். இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இளைய மகன் தினேஷ்குமார் (வயது 17). விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை முருகேசன் தனது மனைவியுடன் பேரையூரில் நடைபெற்ற கோவில் விழாவிற்காக சென்றுவிட்டார். வீட்டில் முருகேசனின் தந்தை வேலுச்சாமி இருந்துள்ளார். தினேஷ்குமார் வீட்டில் உள்ள ஒரு அறையில் உள்பக்கமாக பூட்டிவிட்டு இருந்துள்ளார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வேலுச்சாமி, ஜன்னல் வழியாக அறைக்குள் பார்த்தார். அங்கு தினேஷ்குமார், சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
கடிதம்
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலுச்சாமி கூச்சலிட்டார். ேமலும் அவர் இதுகுறித்து தினேஷ்குமாரின் பெற்றோருக்கும், சூலக்கரை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவன் தினேஷ்குமார் எழுதியிருந்ததாக கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் எழுதி இருப்பது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-
என் அப்பா, அம்மாவின் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆகையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு என் அப்பா, அம்மாவோ, எனது நண்பர்களோ காரணம் இல்லை. வேறு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டிருந்தது.
இதுபற்றி முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (7-ந் தேதி) தொடங்கவுள்ள நிலையில் மாணவன் தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story