வாளி தண்ணீரில் தலையை அமுக்கி வடமாநில தொழிலாளி கொலை
கோவை ஆர்.எஸ்.புரத்தில் கூலியை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபர் வாளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்டார்.
கோவை
கோவை ஆர்.எஸ்.புரத்தில் கூலியை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபர் வாளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்டார். பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த அவரை போலீசார் போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வடமாநில தொழிலாளி
கோவை தெப்பக்குளத்தை சேர்ந்தவர் கோபால். இவருக்கு சொந்தமான வீடு ஆர்.எஸ்.புரம் லிங்கப்பசெட்டி வீதியில் உள்ளது. இந்த வீட்டில் உள்ள 3-வது மாடியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முஜிபூர் மாலிக் (வயது 24) மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 4 பேர் வாடகைக்கு தங்கி இருந்தனர்.
இவர்கள் 4 பேரும் சேலை மற்றும் ஜாக்கெட் ஆகியவற்றுக்கு எம்பிராய்டிங் செய்யும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் வீட்டின் வாடகை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து வீடடின் உரிமையாளர் கோபால், வடமாநில வாலிபர் முஜிபூர் மாலிக் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை.
அழுகிய நிலையில் பிணம்
இதனால் சந்தேகமடைந்த அவர், வாடகை வாங்குவதற்காக லிங்கப்பட்டி வீதியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது முஜிபூர் மாலிக் தங்கியிருந்த அறை வெளிபக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அப்போது சமையல் அறையில் இருந்து துர்நாற்றம் வந்தது.
இதனைத்தொடர்ந்து அவர் அங்கு சென்று பார்த்தார். முஜிபூர் மாலிக் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் இருக்கும். இதனால் அதிர்ச்சயடைந்த கோபால் இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வடமாநில வாலிபரின் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தண்ணீரில் அமுக்கி கொலை
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், முஜிபூர் மாலிக்குடன் தங்கியிருந்தவர்களுக்கும் கூலியை பிரிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த உடன் தங்கியிருந்தவர்கள் முஜிபூர் மாலிக்கை அடித்து, பின்னர் அவரது தலையை பிடித்து வாளியில் இருந்த தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததும், பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து முஜிபூர் மாலிக்குடன் தங்கியிருந்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கூலியை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளியை வாளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story