கோவிலில் 3 நேர அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் வரவேற்பு


கோவிலில் 3 நேர அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 4 May 2022 11:22 PM IST (Updated: 4 May 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் 3 நேர அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

ராமேசுவரம், 
ராமேசுவரம் கோவிலில் 3 நேர அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
அன்னதானம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இதுவரையிலும் தினமும் பகல் 12 மணிக்கு மட்டுமே மதிய அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ராமேசுவரம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில ்களில் 3 நேரமும் அன்னதானம் வழங்கப்படும் என்று சட்ட சபையில் தமிழக இந்து சமயஅறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமேசுவரத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறியதாவது:-
ராமேசுவரம் பாரதி நகரை சேர்ந்த ரமேஷ்: தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள மிக முக்கிய கோவில்களில் ஒன்றாக ராமேசுவரம் கோவில் விளங்கி வருகிறது.பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் 3 நேரம் அன்னதான திட்டம் என்ற அறிவிப்பு  வரவேற்கக் கூடிய ஒன்றாகும். இந்தத் திட்டத்தை தாமதப் படுத்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
கண்காணிப்பு
ராமேசுவரம் காந்தி நகரைச் சேர்ந்த பத்மநாபன்: ராமேசுவரம் கோவிலில் தற்போது மதிய நேர அன்னதானம்  நடைபெற்று வருகிறது. இதிலும் ஒரு நாளைக்கு 100 பேர் மட்டுமே சாப்பிட்டு வரும் நிலை உள்ளது. கூட்ட நேரங்களில் ஏராளமான பக்தர்கள் அன்னதானம் சாப்பிட முடியாமல் மிகுந்த மனவருத்தத்துடன் செல்கின்றனர். 
தற்போது 3 நேரமும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். 3 நேரம் அன்னதான திட்டத்தை முழுமையாக விரிவாக்கம் செய்து அதிகமான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரமான உணவுகளை சாப்பிட்டு செல்ல அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை மற்றும் விருப்பமாகும்.
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பிரேமலதா: 3 நேர அன்னதானத் திட்டம் என்பது முழுமையாக வரவேற்கக்கூடிய ஒரு திட்ட மாகும். கோவிலுக்கு வசதி படைத்தவர்கள் மட்டும் வருவது கிடையாது. ஏழை எளியவர்களும் அதிகமாக வருகின்றனர். இதுபோன்று 3 நேர அன்னதான திட்டம் வரும் பட்சத்தில் கஷ்டப்படும் ஏழைகள் மகிழ்ச்சியுடன் உணவு சாப்பிட்டு செல்ல வசதியாக இருக்கும். 
மகிழ்ச்சி
மற்றொரு பெண் பக்தர் சரண்யா: ராமேசுவரம் கோவிலில் 3 நேர அன்னதான திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதை முழுமையாக வரவேற்கிறோம். இதன் மூலம் தொலைதூர ஊர்களில் இருந்து புறப்பட்டு வரும் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் உணவு சாப்பிட்டு விட்டு செல்ல வசதியாக இருக்கும். 
தரிசனம் செய்து கிடைக்கும் உணவையும் சாப்பிட்டு செல்வதன் மூலம் பக்தர்களுக்கு மிகுந்த மன நிம்மதி கிடைக்கும். இந்த திட்டத்தை சிறப்பான முறையில் அமல் படுத்தி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story